Friday, August 13, 2010

!சுதந்திரம், சர்வாதிகாரம் ,ஜனநாயகம், சமுதாய மாற்றம் , தனிமனித ஒழுக்கம் ,ஒரு ரூபாய் அரிசி!

வணக்கம் நண்பர்களே !
நான் கட்டுரை எழுதி பல மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் காலத்திற்கும் கூட பிடிக்கவில்லை போலும் நான் எழுதுவது .
'உனக்கு எழுதுவதற்கு சரியான "தூண்டல்" தருகிறேன் அதுவரை காத்திரு' ,என்றது காலம் . என் கட்டுரையாளனும் 'விடியும் வரை காத்திருக்கிறேன்' என்று என்னுளே உறங்கிக் கொண்டிருந்தான். நேற்று  கால பகவான் கண் திறந்தார்...அத்தூண்டலைத் தந்தார் .அவருக்கு நன்றிகள் கூறி கட்டுரையை ஆரம்பிக்கிறேன் ..!


நேற்று சொந்த காரணத்திற்காக சேலம் வரை செல்ல வேண்டி இருந்தது ..இருக்கைகள் நிரம்பி வழிந்த பேருந்தில் இன்னும் ஆட்களை அடைக்க வண்டியை திண்டுக்கல்லில் நிறுத்தியிருந்தார் ஓட்டுனர் ..அப்போது தோலை மட்டும் ஆடையாய்க் கொண்டு ஒரு சிறுவன் வந்து என் அருகில் நின்றான்.. அவனது எலும்புகளை நான் எண்ணத் தொடங்கியிருந்தேன்.. "அண்ணா ! பசிக்குது எதாவது கொடுங்களேன்"!என்றான்..பையைத் துளாவினேன்.. 'தம்பி சில்லறை இல்லைப்பா', என்று சொன்னேன் ..! 'அண்ணா வயிறு ரொம்ப பசிக்குதுணா'.. என்று காலில் விழ தொடங்கினான் ..அவன் கண்களில்  பசியை நான் வாசித்தேன்.. பையிலிருந்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்..! 'ரொம்ப நன்றி அண்ணே' ! என்று சொல்லி மறுபடி என் காலில் விழுந்தான்.. அவன் முகம் முழுவதும் சிரிப்பு..என் கண்களில்  கண்ணீர் ..!
படிக்கலையாப்பா? என்றேன் ..'இல்லை' என்று தலை அசைத்தான்.. ஏன் என்று என் அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள்
ஓட்டுனர் வண்டியை எடுக்க..வெடுக்கென கீழே இறங்கினான்..வெளியே நின்று எனக்கு சிரித்தபடி கை அசைத்தான்..நானும் கை அசைத்துவிட்டு...திரும்பினேன்..

பேருந்து வேகம் எடுக்கத் தொடங்கியது..கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினேன்..
ஒரு நடுத்தர வயது மனிதர் தன உடலில் சாட்டையை  சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தார்..கருத்திருந்த அவர் உடலில் உதிரம் சொட்டு சொட்டாய்  வடிய சிவந்துபோய் இருந்தார் அந்த கருப்பு மனிதர்..! பக்கத்தில் இடுப்பில் குழந்தையோடு நின்று குடும்பமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர் ...

பிச்சை எடுப்பதே நம் தேசியத்தொழிலோ என்று எண்ணத் தோன்றியது..படித்துக் கொண்டிருந்த ஜெப்ரி ஆர்செர் நாவலை கீழே வைத்துவிட்டு சிந்திக்கத் தொடங்கினேன்..!

நாம் சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன..ஆனால் இன்றும் மக்கள் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட  வழி இல்லாமல்  இருக்கத்தான் செய்கிறார்கள்..!
மற்றொருபுறம் தென் இந்தியாவின் மிகப்பெரிய மால் (mall)  பல திரைப்பட அரங்குகளுடன் கட்டப் படுகிறதாம்.. சென்னையில் !
ஏன் இந்த நிலை ஏற்ற தாழ்வு ..?
நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை..அரசியல் மாற்றம் தேவை...........இன்னும் நீள்கிறது பட்டியல்..
அவைகளுடன் சிலவற்றை  இணைக்க நான் நினைக்கிறேன்.."தனி மனித ஒழுக்கம்,கட்டாய கல்வி, சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனை.."
அரசுகளையும் அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் குறை கூறும் நாம் நம் தவறுகளை மறைக்கிறோம் இல்லை மறந்து விடுகிறோம்..

நமக்கு தேவை அரசியல் மாற்றம் மட்டுமன்று ..சமுதாய மாற்றமும் கூட.. என் நண்பன் ஒருவன் கேரளத்துகாரன் .அங்கே தமிழர்களை அவர்கள் "பிச்சைக்காரர்களாகவும்","திருடர்களாகவும்" பார்க்கிறார்கள் என்றான்.
அவனை அடிக்கலாம் என்று கூட கை ஓங்கிவிட்டேன் ..பின்னொரு சமயம் நான் கேரளாவிற்கு சென்றபோது அங்கே நான் கண்கூட பார்த்தது அவன் பொய் சொல்லவில்லை என்று புரியவைத்தது..இன்றும்  கிராமங்கள் இருக்கின்றன திருடுவதையே தொழிலாக கொண்டு ! இவர்கள் இவ்வாறு இருப்பது நம் கல்வி முறைக்கு ஒரு கேள்விக்குறிதான்..அறியாமையே இவர்கள் இவ்வாறு இருக்க காரணம்..! . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருப்பது சட்ட விரோதம் என்ற நிலையை கொண்டு வந்தாலே இதுபோன்ற இழிநிலையை மாற்றலாம் என்று நினைக்கிறேன்..சர்வாதிகாரம் போல் பலருக்கு தெரியலாம்  ..அவர்களுகெல்லாம் ஒன்று "நோய் குணமாக சில கசப்பு மருந்துகளை ஏற்றுதான் ஆகவேண்டும்.."

எங்கள் ஊர் நகராட்சியில் முதன்முதலாக கட்டணக் கழிப்பறை தொடங்கினார்கள் ஒருவரும் உபோயோகபடுத்தவில்லை..காசை குறைத்தும்  பார்த்தார்கள்..மக்கள் தங்கள் நிலையிலிருந்து நகரமறுத்தார்கள்..இலவச கழிப்பறையாக கூட ஆக்கிபார்த்தார்கள்..! மக்கள் திறந்தவெளி புல்வெளியையே பயன் படுத்துகிறார்கள்..இவர்களை என்ன சொல்ல?
இது ஒரு சிறு உதாரணம் தான்.. நம் தனிமனித ஒழுக்கம் இவ்வாறு இருக்க நாம் மற்றவர்களை(அதிகாரிகள், அரசியல்வாதிகள் ) பற்றி பேசுவது ஏற்புடையது என்று நான் நினைக்க வில்லை ..
மக்களுக்காக அரசு எவ்வளவோ சட்டங்கள்..திட்டங்கள் அறிவித்தாலும்..அதை மக்களுக்கு எடுத்து செல்ல போதிய ஆட்கள் இல்லை..தொண்டு நிறுவனங்களும் கூட சுயநலத்தோடு செயல்படுகின்றன..
நம் போன்ற இளைஞர்களுக்கு தங்கள் குல தெய்வங்களான நம்மூர் நடிகர்களுக்கு பாலபிசேகம் செய்வதிலும் ..தியேட்டர் வாசலில் பணத்தையும் ,காலத்தையும் தொலைப்போமே தவிர பொதுநலம்..தொண்டு, சமுதாய முன்னேற்றம் , என்று சிந்திப்போமா ??
இந்நிலை மாறவும்   தனி மனித ஒழுக்கத்திற்காகவும்  சட்டத்தை மீறுவோருக்கெதிராகவும்  கடும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ..சட்டங்கள் தொடர்ந்து அமலிலும் இருக்க வேண்டும் ..!

இத்தனை கால சுதந்திரத்திற்கு பின்னும்..ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான்..ஒரு வேலை சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றிருக்கிறது  மக்கள் நிலை..இது மிகவும்  சிந்திக்க  வேண்டிய  விஷயம் 
63 வருட ஜனநாயகத்தின் நிலை இவ்வாறு இருக்க..அதன் மேல் எனது நம்பிக்கை..சிறிது குறைகிறது..ஜனநாயகத்திற்கு..புதிய ஒரு அர்த்தத்தை நாம் கொண்டு வரவேண்டும....ஜனநாயகம் கம்யுனிசம்,சர்வாதிகாரம்  என்று எல்லா சித்தாந்தங்களினிருந்தும் நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு புதிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் .அப்படி ஒன்று உருவானால் ..கல்வி வியாபாரமாக இருக்காது ,தவறு செய்வோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர், விவசாயம் பெருகும் , சமுதாய மாற்றம் ஏற்படும் ..
அம்மாற்றம் ஏற்படுவது நம் கையில் தான் இருக்கிறது இளைஞர்களே ! ..
"மாற்றம் ஒன்றே மாறாதது"  என்பதை நினைவில் கொண்டு நம் சமுதாயம் மாற்றப்படவேண்டும் என்று நினைத்து அதற்காக நாம் செயல் படவேண்டும் நம் சமுதாயத்தை மாற்ற வேண்டும் ..! நாம் பார்க்காவிட்டாலும் நம் பிள்ளைகளாவது நாம் காணும் கனவு தேசத்தில் வாழ்வதற்கு இப்போதே செயல் படுவோம்..
                                                வெற்றி நமதே !
                                                         நன்றி !

(படித்து போர் என்று சொல்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..! ஏதோ கொஞ்சம் புரிகிறது என்று சொல்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் கூட  அதுவே என் வெற்றி ! )

Sunday, July 11, 2010

!அம்மூவரும் நான் பெற்ற தண்டனையும் !

பச்சைப் பட்டுடுத்தி எழுந்து நின்று 
அருவியாய்க்கொட்டி கீதம் பொழிந்தாள் ..
மலையவள் ..
அவளது அழகில் மயங்கி நான்.. 
சிற்றின்பத்தில் லயித்திருக்க...

தவழ்ந்து வந்து என்னை வருடிவிட்டு ..
பேரின்பத்திற்கே..! என்னை பதவியேற்றம் செய்தாள்..
தென்றல் அவள்..

சில்லென்ற சாரலாம் மூன்றாமவள் ..
வந்து என்னை மது உண்ட தேனியாய் ..
மாற்றிவிட்டாள்..
என்னை சொக்கவைத்தாள்...
மாயவலையில் சிக்கவைத்தாள்...

"பேராசை பிசாசு..!" என்னை பிடித்து வைக்க..
அடுத்தவள் வரவிற்காய் 
காத்து நின்றேன் ..
கண் பூத்து நின்றேன்....
பேரிடியாய் என் இதயத்தில் விழுந்தது...
சுரீரென்று.. சுட்ட வெயில்!..
அம்மூவரின் "தகப்பன்" என்று மனதில் சிரித்து 
அசையாமல் நின்றேன்..

அழைப்பு மணி.. அடித்து..! என்னை எழுப்ப ..
சே! என்று எழுந்தேன்..
 சூரியன் வெளியே சுட்டெரித்துக் கொண்டிருந்தார்..!
"கனவிற்காக நிஜத்திலும் தண்டனையா?",
என்று சிரித்தபடி..
புறப்பட்டேன்..
தண்டனையை பெறுவதற்கு..!

Sunday, July 4, 2010

!காதலித்துப் பார் ..!

காதலித்துப் பார் ..!
இருளை ரசிக்கச் செய்யும்..
அமாவாசையும் அழகாய் தெரியும்..
வருடங்கள் நிமிடமாகும் ..
நிமிடங்கள் வருடமாகும்..
காதலித்துப் பார்..
புதிது புதிதாய் பொய் சொல்ல வேண்டுமா?
தனிமையில் சிரிக்க வேண்டுமா?
கவிகள் பல புனைய வேண்டுமா?
காதலித்துப் பார்..
நண்பர்கள் தெய்வமாய் தெரிவர்..
காதலியின் அப்பாக் கூட வில்லனாய்க் காட்சி தருவார்..
காதல் புரட்சி செய்யும்..
இருவது வருட உறவையும் இரு நிமிடங்களில் ..
உடைக்கச் செய்யும் ..
காதலித்துப் பார்..

காதல் 
ஈருயிரை இணையச் செய்யும்..
ஈருடல் ஓருயிரான விந்தையை உணரச் செய்யும்..

கல்லூரியில் காதல்  ஒரு விஷ பரிட்சை 
அது தேவதைகளுக்கு வேலைவாய்ப்பும் ..
தேவதாஸ்களுக்கு அரியர்ஸ் பேப்பரையும் 
பரிசாய்த் தரும்..

காதல் 
ஆர்மோன்களின் திருவிளையாடல் ..
காதல் 
இன்ப வெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்யும்..
கூடாக் காதல் ..
கண்களிலும் கூட வெள்ளப்  பெருக்கெடுக்கச் செய்யும் ..
காதல் 
ஒரு புரியா புதிர்..
விடை காண வேண்டுமா ?
நீயும் கவி பாட வேண்டுமா?
காதலித்துப் பார்..!

Saturday, April 24, 2010

!அது ஒரு மழைக்காலம்.!

அது ஒரு மழைக்காலம்..
என் தோட்டத்து ரோஜாவின் இதழ்களில்..
முத்தமிட்டு கொண்டிருந்தன மழைத்துளிகள்..
சில்லிட்டு பூத்திருந்தால் என் தோட்டத்து ஒற்றை ரோஜா..

வெளியே கொட்டும் மழை..
அப்பொழுது ஒரு வெள்ளை ரோஜா..
நடக்கும் சக்தி கொண்ட அற்புத ரோஜா..
நான் பார்த்ததிலேயே அழகிய ரோஜா..

இறைவனிடம் அழகு கொடை பெற்று..
குடை கொண்டு நடந்து வந்தாள்...
அவள் என்ற அந்த பெயர்தெரியா ரோஜா..
தன்னை முத்தமிட வந்த மழைத்துளிகளைக்..
குடை கொண்டு தடுத்தபடி நடந்தாள் ..
சோ!! என்று அழுதபடி குடையிலிருந்து தெறித்துத்
தற்கொலை செய்தன.மழைத்துழிகள்
தோல்வியைத் தாங்காது
அவளைத் தொட்டவை சில அங்கேயே..
மோட்சம் பெற்றன..பாவம்!
என் கண்ணிலிருந்து..மறையும் வரை..
பார்த்தேன் ..அவளை கண்ணிமைக்காது..
என் அரும்பு மீசையை தடவியபடி..

பெயர் தெரியா அரோஜாவின்..நினைவில் ..
இருந்து எழவில்லை பல மணி நேரத்திற்கு

மழை வெறித்தது..
பிரியா விடை பெற்றன என் தோட்டத்து
ரோஜாவின் மழைத்துழிகள்..
அன்று என் தோட்டத்தில் புதிதாய் ஒரு மொட்டு..
பூத்திருந்தது..
என் இதயத்திலும் கூட..புதிதாய் ஒன்று...

பசுமையாய் என் நினைவில் இன்றும் உண்டு..
அந்த பத்து நிமிட முதல் காதல்..
இன்று வரை நான் மீண்டும் காணாத அந்த வெள்ளை ரோஜா..
அது ஒரு அழகிய மழைக்காலம்..


Saturday, April 10, 2010

!அவ்வேழு மணி நேரக் கனா.!

கண்களாலே கவி பாடி ..
எனைத் தாண்டி நீ சென்றாய்..
அன்று முதல் தேடுகிறேன்...
என் இதயத்தைத் தொலைத்துவிட்டு..


அன்பே !
களவாடிய என் இதயம் வேண்டாம்..
காதலோடு உன் இதயம் வேண்டும்...
தருவாயோ..?

உனைக் கண்ட நாள் முதலே
கனாக் காங்கிறேனடி தோழி..
நம் எதிர்காலம் பற்றி..
அவ்வேழு மணி நேரக் கனாக் காண..
பதிநேழுமணி நேர தவம் யுகங்களாய்..
கழிவதேனோ?

ஏழு மணி நேரம் கனா..
கனா முழுதும்..
நீ..
கவிதை..
நம் காதல்..
ஊடல்..
திகட்டா..முத்தம்..
குழந்தையின் சங்கீதம்..
நேற்றைய கனாக் கவி வரி
இன்னும் என் நினைவில் உண்டு..
"மண் தின்னும் நாள் வரையிலும்
சேர்ந்திருப்பேன் உன்னோடு இதே காதலோடு.."
பகல் கனவு அல்லவே...ஆதல் .
கனா மெய்ப்பட வேண்டும் தோழி..
நிஜத்திலே..
மண் தின்னும் வரையில் சேர்ந்திருக்க
அனுமதிப்பாயோ?..
உன் மடியில் நான் உயிர் விட..
வரம் தருவாயோ?
என் காதலை
ஏற்பாயோ?..
ஏற்பாயோ?

கூவியது அலாரம்..
கண் விழித்தேன்..
சே!
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
நிஜத்திலே காணாக் காதலை..பற்றி..
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
சிரிப்பு வந்தது..
எனக்கு

Friday, March 26, 2010

பைத்தியத்தின் கடிதம்

ன்பே ..!
சையில் உன்னை அணைத்தது ..
தழில் இதழ் புதைத்தது ..
ரக்கூந்தலில் நீ முகத்தி அறைந்தது..
ன் சிரிப்பில் எனைத் தொலைத்தது...
தி நான் அணைத்த விளக்கு கண்டு..வெட்கத்தை அள்ளி நீ பூசியது..

ட்டா உயரத்தையும் எட்டிபிடிக்க நீ உதவியது .
எல்லாம் என் மனதில் உண்டு என்னுயிரே அழியாது இன்றுவரை..

ற்றிவிட்ட..ஏணியே எங்கே நீ?
ரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டாய் மீளாத்துயில்கொள்ள..
யாது வேண்டுகிறேன்
வையை போல் ஐயன் முருகனிடம் ..
நீ மீண்டும் வர வேண்டும் என்று..
மக்களிடம் பைத்திய பட்டம் பெற்று ..

இப்படிக்கு,
பைத்தியம் (மக்களை பொறுத்தவரை) எனப்படும் உன் காதலன்

Thursday, March 4, 2010

!அவனை வீழ்த்த வந்தவள் கதை !

அந்தி மயங்க மயங்க...
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..

வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..

ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..

அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"