Thursday, August 26, 2010

! நான் தேடும் கனவு !

வாழ்க்கை வரலாறு ...

காதல் வேதியியல்..

நீ இயற்பியல்...என்பேன் ..

நாம் சேர்ந்தால்

அது உயிரியல் ஆகிடும்..

"எந்திரன்" தந்த அறிவியல் பித்து தணிக்க ...

என் அறிவு பித்துக் கொண்ட அறிவியற்கவிதை..



கண் கொண்டு

காற்றலையில் கதைத்து

கவர்ந்திழுப்பாய்..

எதிர் துருவம் என்னை..!

உன் கண்களும் காந்தங்களே..!



வளையும் உன் வளையில்..

அலையில் தொலையும் கரையாய்..

தொலையும் என் இதயம்..

காமம் என் காதலை புசிக்கும்..

சுதாரிப்பேன்..!

அவ்வப்போது என் இதயத்தில் நிலநடுக்கம்..

சுனாமியாய்..ஆர்மோன்களின் வெள்ளப்பெருக்கம்..

கொண்டு வருவாய்..

ஆசையில் எனை அடித்துச் செல்வாய் !


உடற்கூறு சாத்திரம் படித்த எனக்கு

உள்ளக்கூறு சாத்திரம் படிப்பித்தாய்..

நீ கண்ணிமைக்கும்

ஒவ்வொரு தருணமும்

என்னுள்ளே ஹிரோஷிமா..!

தெரியுமா?

இரவின் இருள் நீக்க

மின்னலே!

அவ்வப்போது நீ வருவாய்..

என் இரவை இனிப்பாக்க..

என் கனாவில் ..வருவாய் நீ..

என் கானா தேவதையே..

நீயும்

மின்னலே..!



ஐன்ஸ்டீனின் கனவில் நீ வரவில்லை..!

இல்லையேல் அவரும் சென்றிருப்பார் கவி எழுத...

அனுவைப் பிளந்திருக்கமாட்டர்..

ஹிரோஷிமா தப்பித்திருக்கும்..



என் மூளை நியுரான்களுக்கு

வேலை அதிகம்..தந்தாய்

தூக்கம் கெடுத்தாய்..!

கிறுக்கவைத்தாய்..!

அழவைத்தாய்..!

சிரிக்கவைத்தாய்..!

கனவில் வாழும் உனை..

நினைவில் கொண்டு..

நிஜத்தில் தேடுகிறேன்

கனவே உனை..!

தேவதையே உனை..!

Friday, August 13, 2010

!சுதந்திரம், சர்வாதிகாரம் ,ஜனநாயகம், சமுதாய மாற்றம் , தனிமனித ஒழுக்கம் ,ஒரு ரூபாய் அரிசி!

வணக்கம் நண்பர்களே !
நான் கட்டுரை எழுதி பல மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் காலத்திற்கும் கூட பிடிக்கவில்லை போலும் நான் எழுதுவது .
'உனக்கு எழுதுவதற்கு சரியான "தூண்டல்" தருகிறேன் அதுவரை காத்திரு' ,என்றது காலம் . என் கட்டுரையாளனும் 'விடியும் வரை காத்திருக்கிறேன்' என்று என்னுளே உறங்கிக் கொண்டிருந்தான். நேற்று  கால பகவான் கண் திறந்தார்...அத்தூண்டலைத் தந்தார் .அவருக்கு நன்றிகள் கூறி கட்டுரையை ஆரம்பிக்கிறேன் ..!


நேற்று சொந்த காரணத்திற்காக சேலம் வரை செல்ல வேண்டி இருந்தது ..இருக்கைகள் நிரம்பி வழிந்த பேருந்தில் இன்னும் ஆட்களை அடைக்க வண்டியை திண்டுக்கல்லில் நிறுத்தியிருந்தார் ஓட்டுனர் ..அப்போது தோலை மட்டும் ஆடையாய்க் கொண்டு ஒரு சிறுவன் வந்து என் அருகில் நின்றான்.. அவனது எலும்புகளை நான் எண்ணத் தொடங்கியிருந்தேன்.. "அண்ணா ! பசிக்குது எதாவது கொடுங்களேன்"!என்றான்..பையைத் துளாவினேன்.. 'தம்பி சில்லறை இல்லைப்பா', என்று சொன்னேன் ..! 'அண்ணா வயிறு ரொம்ப பசிக்குதுணா'.. என்று காலில் விழ தொடங்கினான் ..அவன் கண்களில்  பசியை நான் வாசித்தேன்.. பையிலிருந்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்..! 'ரொம்ப நன்றி அண்ணே' ! என்று சொல்லி மறுபடி என் காலில் விழுந்தான்.. அவன் முகம் முழுவதும் சிரிப்பு..என் கண்களில்  கண்ணீர் ..!
படிக்கலையாப்பா? என்றேன் ..'இல்லை' என்று தலை அசைத்தான்.. ஏன் என்று என் அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள்
ஓட்டுனர் வண்டியை எடுக்க..வெடுக்கென கீழே இறங்கினான்..வெளியே நின்று எனக்கு சிரித்தபடி கை அசைத்தான்..நானும் கை அசைத்துவிட்டு...திரும்பினேன்..

பேருந்து வேகம் எடுக்கத் தொடங்கியது..கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினேன்..
ஒரு நடுத்தர வயது மனிதர் தன உடலில் சாட்டையை  சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தார்..கருத்திருந்த அவர் உடலில் உதிரம் சொட்டு சொட்டாய்  வடிய சிவந்துபோய் இருந்தார் அந்த கருப்பு மனிதர்..! பக்கத்தில் இடுப்பில் குழந்தையோடு நின்று குடும்பமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர் ...

பிச்சை எடுப்பதே நம் தேசியத்தொழிலோ என்று எண்ணத் தோன்றியது..படித்துக் கொண்டிருந்த ஜெப்ரி ஆர்செர் நாவலை கீழே வைத்துவிட்டு சிந்திக்கத் தொடங்கினேன்..!

நாம் சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன..ஆனால் இன்றும் மக்கள் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட  வழி இல்லாமல்  இருக்கத்தான் செய்கிறார்கள்..!
மற்றொருபுறம் தென் இந்தியாவின் மிகப்பெரிய மால் (mall)  பல திரைப்பட அரங்குகளுடன் கட்டப் படுகிறதாம்.. சென்னையில் !
ஏன் இந்த நிலை ஏற்ற தாழ்வு ..?
நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை..அரசியல் மாற்றம் தேவை...........இன்னும் நீள்கிறது பட்டியல்..
அவைகளுடன் சிலவற்றை  இணைக்க நான் நினைக்கிறேன்.."தனி மனித ஒழுக்கம்,கட்டாய கல்வி, சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனை.."
அரசுகளையும் அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் குறை கூறும் நாம் நம் தவறுகளை மறைக்கிறோம் இல்லை மறந்து விடுகிறோம்..

நமக்கு தேவை அரசியல் மாற்றம் மட்டுமன்று ..சமுதாய மாற்றமும் கூட.. என் நண்பன் ஒருவன் கேரளத்துகாரன் .அங்கே தமிழர்களை அவர்கள் "பிச்சைக்காரர்களாகவும்","திருடர்களாகவும்" பார்க்கிறார்கள் என்றான்.
அவனை அடிக்கலாம் என்று கூட கை ஓங்கிவிட்டேன் ..பின்னொரு சமயம் நான் கேரளாவிற்கு சென்றபோது அங்கே நான் கண்கூட பார்த்தது அவன் பொய் சொல்லவில்லை என்று புரியவைத்தது..இன்றும்  கிராமங்கள் இருக்கின்றன திருடுவதையே தொழிலாக கொண்டு ! இவர்கள் இவ்வாறு இருப்பது நம் கல்வி முறைக்கு ஒரு கேள்விக்குறிதான்..அறியாமையே இவர்கள் இவ்வாறு இருக்க காரணம்..! . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருப்பது சட்ட விரோதம் என்ற நிலையை கொண்டு வந்தாலே இதுபோன்ற இழிநிலையை மாற்றலாம் என்று நினைக்கிறேன்..சர்வாதிகாரம் போல் பலருக்கு தெரியலாம்  ..அவர்களுகெல்லாம் ஒன்று "நோய் குணமாக சில கசப்பு மருந்துகளை ஏற்றுதான் ஆகவேண்டும்.."

எங்கள் ஊர் நகராட்சியில் முதன்முதலாக கட்டணக் கழிப்பறை தொடங்கினார்கள் ஒருவரும் உபோயோகபடுத்தவில்லை..காசை குறைத்தும்  பார்த்தார்கள்..மக்கள் தங்கள் நிலையிலிருந்து நகரமறுத்தார்கள்..இலவச கழிப்பறையாக கூட ஆக்கிபார்த்தார்கள்..! மக்கள் திறந்தவெளி புல்வெளியையே பயன் படுத்துகிறார்கள்..இவர்களை என்ன சொல்ல?
இது ஒரு சிறு உதாரணம் தான்.. நம் தனிமனித ஒழுக்கம் இவ்வாறு இருக்க நாம் மற்றவர்களை(அதிகாரிகள், அரசியல்வாதிகள் ) பற்றி பேசுவது ஏற்புடையது என்று நான் நினைக்க வில்லை ..
மக்களுக்காக அரசு எவ்வளவோ சட்டங்கள்..திட்டங்கள் அறிவித்தாலும்..அதை மக்களுக்கு எடுத்து செல்ல போதிய ஆட்கள் இல்லை..தொண்டு நிறுவனங்களும் கூட சுயநலத்தோடு செயல்படுகின்றன..
நம் போன்ற இளைஞர்களுக்கு தங்கள் குல தெய்வங்களான நம்மூர் நடிகர்களுக்கு பாலபிசேகம் செய்வதிலும் ..தியேட்டர் வாசலில் பணத்தையும் ,காலத்தையும் தொலைப்போமே தவிர பொதுநலம்..தொண்டு, சமுதாய முன்னேற்றம் , என்று சிந்திப்போமா ??
இந்நிலை மாறவும்   தனி மனித ஒழுக்கத்திற்காகவும்  சட்டத்தை மீறுவோருக்கெதிராகவும்  கடும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ..சட்டங்கள் தொடர்ந்து அமலிலும் இருக்க வேண்டும் ..!

இத்தனை கால சுதந்திரத்திற்கு பின்னும்..ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான்..ஒரு வேலை சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றிருக்கிறது  மக்கள் நிலை..இது மிகவும்  சிந்திக்க  வேண்டிய  விஷயம் 
63 வருட ஜனநாயகத்தின் நிலை இவ்வாறு இருக்க..அதன் மேல் எனது நம்பிக்கை..சிறிது குறைகிறது..ஜனநாயகத்திற்கு..புதிய ஒரு அர்த்தத்தை நாம் கொண்டு வரவேண்டும....ஜனநாயகம் கம்யுனிசம்,சர்வாதிகாரம்  என்று எல்லா சித்தாந்தங்களினிருந்தும் நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு புதிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் .அப்படி ஒன்று உருவானால் ..கல்வி வியாபாரமாக இருக்காது ,தவறு செய்வோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர், விவசாயம் பெருகும் , சமுதாய மாற்றம் ஏற்படும் ..
அம்மாற்றம் ஏற்படுவது நம் கையில் தான் இருக்கிறது இளைஞர்களே ! ..
"மாற்றம் ஒன்றே மாறாதது"  என்பதை நினைவில் கொண்டு நம் சமுதாயம் மாற்றப்படவேண்டும் என்று நினைத்து அதற்காக நாம் செயல் படவேண்டும் நம் சமுதாயத்தை மாற்ற வேண்டும் ..! நாம் பார்க்காவிட்டாலும் நம் பிள்ளைகளாவது நாம் காணும் கனவு தேசத்தில் வாழ்வதற்கு இப்போதே செயல் படுவோம்..
                                                வெற்றி நமதே !
                                                         நன்றி !

(படித்து போர் என்று சொல்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..! ஏதோ கொஞ்சம் புரிகிறது என்று சொல்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் கூட  அதுவே என் வெற்றி ! )